Tag Archives: Tamil

லெஸ் நடைதாள் மொழி

CSS எனப்படும் விழுதொடர் நடைதாள் மொழி (Cascading Style Sheets) பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இணையத்தின் ஆஸ்தானக் குறியீட்டு மொழியாக மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) விளங்குவதைப் போல, இணையத்தின் ஆஸ்தான ஒப்பனையாளர் நமது CSS தான். மிகவும் எளிமையான மொழிதான் என்றாலும், தனக்கென பல வறையரைகளைக் கொண்டது CSS. எடுத்துக்காட்டாக, இம்மொழியில் மாறிகள் (variables) இல்லை. இணையதளம் பெரிதாக வளரும்போது CSS நிரல்களைப் பராமரிப்பது கடினமாகிவிடலாம். இதுபோன்ற பல குறைபாடுகளைப் போக்கி, அதே நேரம் CSS-ன் எளிமையையும் பாதுகாத்து, இணைய வடிவமைப்பாளர்களின் பணியை எளிதாக்குகிறது  LESS என்னும் நடைதாள் மொழி.

இது CSS-ற்கு பல புதிய வசதிகளைச் சேர்க்கும் ஒரு மேம்பாடுதானே அன்றி, CSS-ற்கான மாற்றுமொழி அல்ல. அதாவது, இதுவரை நீங்கள் எழுதிவந்த CSS எதையும் மாற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. லெஸ் பயன்படுத்த ஒரே ஒரு ஜாவாஸ்க்ரிப்ட் கோப்புதான் தேவை. அதை இங்கே பெற்றுக் கொள்ளலாம்.

இப்போது, கீழ்க்காணும் இரண்டு வரிகளை உங்கள் வலைப்பக்கத்தின் <head>-ல் சேர்க்கவும்:

<link rel="stylesheet/less" type="text/css" href="styles.less">
<script src="less.js" type="text/javascript"></script>

இங்கு <link>-ன் rel பண்பு கவனிக்கத்தக்கது. CSS கோப்புகளை இணைப்பதுபோல் அல்வாமல், லெஸ் கோப்பினை இணைக்கும்போது, இறுதியில் /less சேர்க்கவேண்டியது அவசியம். மேலும், லெஸ் கோப்புகளுக்கு அடுத்ததாகவே less.js கோப்பை இணைக்க வேண்டும்.

இப்போது, less.js -ல் உள்ள நிரல் இணைக்கப்பட்ட லெஸ் கோப்புகளைப் CSS-ஆக மாற்றி உலாவியிடம் கொடுக்கும், உலாவி எப்போதும்போல CSS-ஐ கையாளும். மாறாக, வழங்கியிலேயே லெஸ்ஸை CSS-ஆக மாற்றியும் அனுப்பலாம். இது வலை உலாவியின் பழுவைக் குறைப்பதோடு, ஜாவாஸ்க்ரிப்ட் முடக்கப்பட்டிருக்கும் சூழலிலும் வேலை செய்யும். வழங்கியில் லெஸ் நிறுவ NPM (Node Package Manager) தேவை.

மாறிகள் (Variables)

வலைத்களங்களில் color palette எனப்படும் நிறத்தட்டுகள் பயன்படுத்தப்படுவது (ஒன்றுடன் மற்றொன்று இயைந்து அழகாய்த் தோன்றக்கூடிய நிறங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தக் குறிப்பிட்ட சில நிறங்களை மட்டுமே பயன்படுத்துவது) வழக்கம். இத்தகைய சூழல்களில் அந்த நிறங்களை மாறிகளைச் சேமித்துக் கொள்வது மிகவும் எளிமையா இருக்கும். இல்லையெனில் ஒவ்வொரு முறை நிறங்களைப் பயன்படுத்தும்போதும், அவற்றிற்கான அறுபதின்ம (hexadecimal) குறியீடுகளை நினைவில் வைத்துக் கொள்ளவோ காபி-பேஸ்ட் செய்யவோ வேண்டும்.

இதேபோல் வலைப்பக்கத்தின் வடிவமைப்பிலும் குறிப்பிட்ட நீள அகலங்களைப் பயன்படுத்துவது முறை (grids).

எடுத்துக்காட்டு

@blue:   #049cdb;
@green: #46a546;
@red:    #9d261d;

@gridColumns: 12;
@gridColumnWidth: 60px;
@gridGutterWidth: 20px;

மிக்ஸின்கள் (Mixins)

ஒரு ruleset-ன் விதிகளை இன்னொரு ruleset-ல் பயன்படுத்த வழிசெய்கிறது மிக்ஸின்கள்.

எடுத்துக்காட்டு

.bordered {
 border-top: 1px solid black;
 border-botton: 1px solid gray;
}

.someClass {
 .bordered;
 /* Some other style */
}

மிக்ஸின்களைப் பிறமொழிகளில் உள்ள function-களைப் போலவும் பயன்படுத்தலாம். திரும்பத் திரும்பச் செய்யவேண்டிய ஒரே மாதிரியான வேலைகளை இதன்மூலம் எளிதாகச் செய்யலாம்.

எடுத்துக்காட்டு

.border-radius(@radus: 5px) {
  -webkit-border-radius: @radius;
   -khtml-border-radius: @radius;
     -moz-border-radius: @radius;
          border-radius: @radius;
}

.someClass {
 .border-radius(6px);
 /* Some other style */
}

உள்ளடக்கபட்ட விதிகள் (Nested Rules)

ஒரு CSS-selector-ற்கான விதிகளை எழுதிய பிறகு, அதற்குள் இருக்கும் மற்ற selector-களுக்கான விதிகளைக் குறிப்பிட CSS-ல் கீழ்க்கண்டவாறு எழுதுவோம்.

#header {
 ...
}

#header .logo {
 ...
}

இதை லெஸ்ஸில் இன்னும் எளிதாக எழுதலாம்.

#header {
 ...
 .logo {
  ...
 }
}

செயல்பாடுகள் (Operations)

எண்களை மட்டுமல்லாமல் நிறங்களையும் நீள அகலங்களையும் (1px, 2cm போன்றவை) கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் செய்ய முடியும்.

எடுத்துக்காட்டு

@base_margin: 10px;
@double_margin: @base_margin * 2;

@full_page: 960px;
@half_page: @full_page / 2;

@base_color: #550;
@dark_color: @base_color + #333;

நிறச் செயல்பாடுகள்

நிறங்களை ஒன்றுடன் ஒன்று கூட்டுவதும் கழிப்பதும் மட்டுமில்லாமல், லெஸ் நிறங்களுக்கான கீழ்க்காணும் பயனுள்ள கட்டளைகளையும் நமக்குத் தருகிறது.

lighten(@color, 10%); // a color 10% *lighter* than @color
darken(@color, 10%); // a color 10% *darker* than @color
saturate(@color, 10%); // a color 10% *more* saturated than @color
desaturate(@color, 10%); // a color 10% *less* saturated than @color
fadein(@color, 10%); // a color 10% *less* transparent than @color
fadeout(@color, 10%); // a color 10% *more* transparent than @color
fade(@color, 50%); // @color with 50% transparency
spin(@color, 10); // a color with a 10 degree larger hue than @color
spin(@color, -10); // a color with a 10 degree smaller hue than @color
mix(@color1, @color2); // a mix of @color1 and @color2

ஜாவாஸ்க்ரிப்ட் கட்டளைகள்

ஆம், CSS-க்குள் ஜாவாஸ்க்ரிப்ட் பயன்படுத்த முடியும்.

எடுத்துக்காட்டு

@string: `'howdy'.toUpperCase()`; /* @string becomes 'HOWDY' */

@string: 'howdy';
@var: ~`'@{string}'.topUpperCase()`; /* becomes 'HOWDY' */

@height = `document.body.clientHeight`;

இன்னும் பல…

இன்னும் பல வசதிகளைத் தருகிறது லெஸ். இதைவிட்டு இன்னும் வெறும் CSS-ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் வீணாகும் என்பதை யோசியுங்கள். LESS-ஐ கொண்டு உருவாக்கபட்ட படைப்புகளுள் குறிப்பிடத்தக்கது ட்விட்டர் உருவாக்கிய பூட்ஸ்ட்ராப். அதனைப் பயன்படுத்திப் பாருங்கள், லெஸ்ஸின் ஆற்றல் புரியும்.

முக்கியமாக, லெஸ் ஒரு கட்டற்ற மென்பொருள் – அப்பச்சே உரிமத்தோடு வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்:

ஃபெடோரா – ஒரு மேற்பார்வை

இக்கட்டுரை ஃபெடோரா இணையதளத்தில் உள்ள இந்த ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பாகும்.

Fedora என்றால் என்ன?

ஃபெடோரா என்பது ஒரு லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் (உங்கள் கணினியை இயக்கத் தேவையான மென்பொருட்களின் தொகுப்புதான் இயங்குதளம்). மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்™, மேக் ஓஎஸ் X (Mac OS X™) போன்ற பிற இயங்குதளங்களுடன் சேர்த்தோ அல்லது அவற்றிற்கு மாற்றாகவோ ஃபெடோராவைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தவும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.

ஃபெடோரா ப்ராஜெக்ட் என்பது கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களும் அவற்றைப் பயன்படுத்துவோரும், அவற்றை உருவாக்குவோரும் இணைந்த ஓர் உலகளாவிய சமூகம். ஒரு சமூகமாய் வேலை செய்து, கட்டற்ற நிரல்களை உருவாக்குவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் முன்னோடியாய்த் திகழ்வதே எங்கள் குறிக்கோள். உலகின் மிக நம்பகமான திறமூல மென்பொருள் தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனமான ரெட் ஹேட் (Red Hat) ஃபெடோராவிற்கு நிதியுதவி வழங்கி வருகிறது. கூட்டாக இணைந்து உழைப்பதை ஊக்குவிக்கவும் புதுமையான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக வழிசெய்யவுமே ரெட் ஹேட் நிறுவனம் ஃபெடோராவிற்கு நிதியுவி செய்கிறது.

ஃபெடோராவை எது தனித்துவப்படுத்துகிறது?

கட்டற்ற மென்பொருட்களின் மதிப்பை நம்பும் நாங்கள், எல்லோரும் பயன்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் வல்ல தீர்வுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போராடி வருகிறோம். ஃபெடோரா இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, அதனை உங்களுக்கு வழங்குவதிலும் முழுக்க முழுக்க கட்டற்ற மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த இணையதளம் கூட கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்.

மேலும், கூட்டு உழைப்பின் ஆற்றலை நாங்கள் நம்புகிறோம். எங்கள் வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கட்டற்ற மென்பொருள் பணித்திட்டக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். இக்குழுக்கள் “அப்ஸ்ட்ரீம்” (upstream) என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள்தான் ஃபெடோராவில் காணப்படும் பெரும்பாலான மென்பொருட்களை உருவாக்குகின்றனர். எங்கள் பணியிலிருந்து எல்லோரும் பலன்பெறவும், ஏற்படும் மேம்பாடுகள் எல்லோருக்கும் மிக விரைவாய்க் கிடைக்கும் வண்ணம் அமையவும் நாங்கள் இவர்களோடு நெருங்கிப் பணியாற்றுகிறோம். இந்தக் குழுக்கள் செல்லும் அதே திசையில் நாங்களும் பணியாற்றுவதன் மூலம், கட்டற்ற மென்பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் நன்றாகச் செயல்படுவதையும், பயனருக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தருவதையும் உறுதி செய்கிறோம். மேலும் பயனர்களுக்கு மட்டுமின்றி அப்ஸ்ட்ரீம்-க்கும் உதவக்கூடிய மேம்பாடுகளையும் நாங்கள் விரைவாய் கொண்டுவர முடியும்.

கட்டற்ற இயங்குதளம் பற்றிய தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி செயல்படுத்த அதிகாரம் அளிக்கவேண்டும் என்று நம்புகிறோம். ஃபெடோராவை யார் வேண்டுமானாலும் மாற்றியமைத்து புதிய பெயரில் கூட வெளியிடலாம். அதற்கான மென்பொருட்களை நாங்கள் ஃபெடோராவிலேயே வழங்குகிறோம். சொல்லப்போனால், ரெட்ஹேட் எண்டர்ப்ரைஸ் லினக்ஸ்(RHEL), ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினித் திட்டத்தின் XO கணினி, க்ரியேட்டிவ் காமன்ஸ்-ன் Live Content DVDகள் எனப்பல வழிப்பொருட்கள் தோன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ஃபெடோரா.

ஃபெடோராவின் மைய விழுமங்கள் என்ன?

சுதந்திரம், நண்பர்கள், அம்சங்கள், முதன்மை என்னும் நான்கும் ஃபெடோராவின் மைய விழுமங்கள் ஆகும். அவை கீழே விளக்கபட்டுள்ளன.

சுதந்திரம்

கட்டற்ற மென்பொருட்களை முன்னேற்றும் குறிக்கோளை நிறைவேற்ற, நாங்கள் வினியோகிக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. ஃபெடோராவை முற்றிலும் கட்டற்றதாகவும் எல்லோரும் பகிர்ந்துகொள்ளத் தக்கதாகவும் ஆக்க, தனியுரிம மென்பொருட்களுக்கு இணையான கட்டற்ற மென்பொருள்களை வழங்குகிறோம். ஆகவே, நாங்கள் உருவாக்கியதை யார் வேண்டுமானாலும் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்; கட்டற்ற மென்பொருட்களை மேலும் பரப்பலாம்.

நண்பர்கள்

உலகெங்கிலும் உள்ள மக்கள் ஓர் உறுதியான சமூகமாய் இணைந்து உழைக்கும்போது வெற்றி கிட்டும் என்பது எங்கள் நம்பிக்கை. எங்கள் விழுமங்களுக்கு மதிப்பளித்து உதவ விழையும் யார்க்கும் ஃபெடோராவில் இடமுண்டு. பிறருடன் வெளிப்படையாக இணைந்து பணியாற்றுவதோடு, எங்களுக்கு நிதியதவி செய்வோருடன் உள்ள திடமான கூட்டணியின் மூலமும் பல உயரங்களை நம்மால் எட்ட முடியும்.

அம்சங்கள்

புதிய அம்சங்களை உருவாக்குவதற்கான கடின உழைப்பு கட்டற்ற மென்பொருட்களை மேலும் ஆற்றல்மிக்கதாகவும், நெகிழ்தன்மை கொண்டதாகவும், பல லட்சம் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்குகிறதென்று நம்புகிறோம். கட்டற்ற மென்பொருட்களை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்வதானால், அதற்காக எங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள நாங்கள் தயங்குவதில்லை. பல மென்பொருள் சமூகங்களோடு நேரடியாக இணைந்து பணியாற்றி, அவர்கள் உருவாக்கியதை ஃபெடோராவின் மூலம் எல்லோர்க்கும் கிடைக்கச் செய்கிறோம். இப்படியாக, ஃபெடோராவைப் பயன்படுத்தவோர, அல்லாதோர் என அனைவரும் பலனடைகிறார்கள்.

முதல்

firstபுதுமையான எண்ணங்களின் ஆற்றலை நம்பும் நாங்கள், அவற்றை எங்களது ஒவ்வொரு வெளியீட்டிலும் வெளிப்படுத்தி வருகிறோம். எங்கள் வெளியீடுகள் வருடம் இருமுறை வருவதால், புதிய மென்பொருட்களைப் பயன்படுத்த நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. அதே சமயம், ஃபெடோராவிலிருந்து உருவாக்கப்பட்ட சில லினக்ஸ் இயங்குதளங்கள் நீண்டநாள் உறுதிப்பாட்டிற்கு உகந்தவை. ஆனால், எப்போதும் எதிர்காலத்தை நீங்கள் முதலில் பார்க்கும் வண்ணம், ஃபெடோராவொ நாங்கள் புதுப்பித்துக்கொண்டே இருப்போம்.

மேலும் அறிய வேண்டுமா?

ஃபெடோரா என்பது ஒரு சிறப்பான இயங்குதளம் மட்டுமல்ல; கட்டற்ற மென்பொருட்களை மேம்படுத்தப் பாடுபடும் மக்களின் ஓர் அற்புதமான சமூகமும் ஆகும். நீங்களும் உதவ விரும்பினால் அதற்கும் வழிகள் உள்ளன. மேலும் அறிந்துகொள்ள கீழ்க்காணும் சுட்டிகளைப் பாருங்கள், ஃபெடோரா இயங்குதளம் பற்றியும், ஃபெடோரா பணித்திட்டம் பற்றியும், அதனைச் சாத்தியமாக்கும் மனிதர்களைப் பற்றியும் தகவல்கள் நிறைந்தது.

ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2

ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ :)

ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான நிரலாக மாற்றிக் காட்டும் ஈமேக்ஸ்.

 1. Indentation அறவே இல்லாத ஒரு நிரலை ஈமேக்ஸில் திறக்கவும்.
 2. C-x அழுத்தியபின் h அழுத்தவும்.
 3. C-M-\ அழுத்தவும்.

உங்கள் நிரல் எவ்வளவு நேர்த்தியாக சீரமைக்கபட்டுவிட்டது! ஆம் இதெல்லாம் ஈமேக்ஸ்கு ஜுஜூபி :D சரி வாருங்கள் மேலும் சில கட்டளைகள் பயில்வோம்.

பல கோப்புகளைக் கையாளுதல்

பல கோப்புகளை ஒரே நேரத்தில் கையாளுவது பல சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பிலிருந்து உரையை நகலெடுத்து இன்னொரு கோப்பில் இடலாம். வலை உலாவிகளில் பல tab-களைப் பயன்படுத்துவது போலத்தான். vi பயன்படுத்திப் பழகியோருக்கு இது புதுமையாக இருக்கலாம். :P

முதல் கோப்பைத் (sample1 என்று வைத்துக் கொள்வோம்) திறந்தபின் இன்னொரு கோப்பையும் (sample2 என்று வைத்துக் கொள்வோம்) அதேபோலத் (C-x C-f) திறக்கவும். இப்போது sample1 sample2-ன் வலப்பக்கத்தில் இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள். அதாவது திறக்கப்படும் ஒவ்வொரு புதிய கோப்பும் தற்போதைய கோப்பின் இடப்பக்கத்தில் திறப்பதுபோல் வைத்துக்கொள்ளலாம். இப்போது sample1-ற்குச் செல்ல C-x அழுத்தி வலது அம்புக்குறியை அழுத்தவும். அதேபோல் மீண்டும் sample2-ற்குச் செல்ல C-x <இடது அம்புக்குறி>.

இப்படிப் புதிய கோப்புகளைத் திறந்துகொண்டே போனால் ஒரு கட்டத்தில் தேவையான கோப்பிற்குச் செல்வது தலைவலியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். நூறு கோப்புகளைத் திறந்தாலும் தேவையான கோப்பிற்குச் செல்ல எளிமையான வழி உள்ளது. C-x அழுத்தி b அழுத்தவும். இப்போது நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும் (இதை mini-buffer எள்று சொல்வதுண்டு). அங்கே தேவையன கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்தவும்.

திறக்கப்படிருக்கும் அனைத்துக் கோப்புகளின் பெயர்களையும் பட்டியலிட C-x C-b.

மீளமைத்தல் (undo)

உரைதிருத்தும் போது மீளமைத்தல் என்பது பலருக்கு முக்கியமான தேவை. இதற்கு C-x u பயன்படுத்தலாம். C-_ என்பதும் இதே வேலையைச் செய்யும்.

தேடுதலும் மாற்றுதலும் (Search and replace)

குறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்றொடரைத் தேட C-s அல்லதி C-r பயன்படுத்தலாம். C-s நிலைகாட்டி இருக்கும் இடத்தில் தொடங்கி முன் நோக்கித் தேடும், C-x பின் நோக்கித் தேடும்.

Regular expressions கொண்டும் தேடலாம். முன்நோக்கித் தேட C-M-s, பின்நோக்கித் தேட C-M-r.

அதேபோல் ஒரு சொற்றொடரைத் தேடி அதற்குப் பதிலாய் வேறொரு சொற்றொடரை இட, C-% அழுத்தவும். Minibuffer-ல் தேடவேண்டிய சொற்றொடரை இட்டு <Enter> அழுத்தவும். பின்னர் புதிய சொற்றொடரை இடவும். இதேபோல் regular expression கொண்டு replace செய்ய C-M-% பயன்படுத்தலாம்.

இப்போது எங்கெல்லாம் replace செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம்.

குறியீடு பொருள்
! அனைத்து இடங்களிலும் மாற்ற
, தற்போது காட்டப்படும் இடத்தில் மட்டும் மாற்ற
y தற்போது காட்டப்படும் இடத்தில் மாற்றி அடுத்த இடத்திற்குச் செல்ல
n அடுத்த இடத்திற்குச் செல்ல
q எதையும் மாற்றாமல் விட

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.

கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களைக் (revision control systems) கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளை உள்ளடக்கியது. அதனைக் கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையாதென நான் கூறியதன் காரணம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன் :)

இதற்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் உருவாக்கப்பட்டு, GPL உரிமத்துடன் (இதுவும் அவர் வடிவமைத்ததே) வெளியடப்பட்ட முதல் மென்பொருள் ஈமேக்ஸ்.

இத்தகைய சிறப்பான ஒரு மென்பொருளைக் கற்றுக்கொள்ள இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்? வாருங்கள் ஈமேக்ஸ் உலகத்திற்குள் புகுவோம்.

நிறுவுதல்

பல குனு/லினக்ஸ் இயங்குதளங்களில் தொகுபதிவகத்திலேயே (repository) ஈமேக்ஸ் கிடைக்கும். அந்தந்த இயங்குதளத்தின் பொதி மேலாண்மை மென்பொருள் வாயிலாகவே நிறுவிக்கொள்ள முடியும். உபுண்டு இயங்குதளத்தில் நிறுவ, முனையத்தில் கீழ்க்காணும் கட்டளையை இடவும்:

sudo apt-get install emacs23

ஈமேக்ஸ் கட்டளைகள்

ஈமேக்ஸ் கட்டளைகளைப் பார்க்கும் முன்பு, இரு குறியீடுகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும்.

குறியீடு பொருள்
C-x Ctrl விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும்
M-x Meta (Alt) விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும்

கோப்பைத் திறத்தல்

C-x அழுத்தி C-f அழுத்தியதும் நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும். அங்கே திறக்கவேண்டிய கோப்பிற்கான பெயரை இடவும்.

Screenshot of opening a file in emacs

Screenshot of opening a file in emacs

கோப்பை சேமித்தல்

கோப்பில் மாற்றங்கள் செய்தபின் அதனை சேமிக்க, C-x C-s (C-x அழுத்தியபின் C-s அழுத்தவும்).

கோப்பை மூடுதல்

சேமித்த கோப்பை மூட C-x k (C-x அழுத்தியபின் k அழுத்தவும்) Enter

ஈமேக்ஸை விட்டு வெளியேற C-x C-c

உரை திருத்துதல்

உரையின் ஒரு பகுதியை select செய்ய, எப்போதும் போல Shift-ஐ அழுத்திக்கொண்டு அம்புக்குறிகளைப் (arrow keys) பயன்படுத்தலாம். அல்லது, அப்பகுதியின் தொடக்கத்தில் நிலைகாட்டியை வைத்து C-<space> அழுத்திவிட்டு, பின்னர் அம்புக்குறிகளைக் கொண்டு தேர்வு செய்யலாம்.

தேர்வு செய்த பகுதியை நகலெடுக்க M-w

தேர்வு செய்த பகுதியை அழிக்க C-w. மற்ற உரைதிருத்திகளில் இருப்பது போல் அல்லாமல், வெட்டுவதும் அழிப்பதும் (cut & delete) ஈமேக்ஸைப் பொறுத்தவரையில் ஒன்றே. அதாவது delete செய்யப்படும் எந்த ஓர் உரையும் clipboard-ல் இருக்கும். எனினும், Backspace அல்லது Delete விசைகளைக் கொண்டு ஒவ்வோர் எழுத்தாக அழிக்கப்படும் உரை க்ளிப்போர்டிற்குச் செல்லாது.

ஏற்கனவே வெட்டப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட உரையை paste செய்ய C-y (y = yank)

உலாவுதல் (navigation)

பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்புக்குறிகள், Home, Endஆகிய விசைகள் அல்லாமல் ஈமேக்ஸிற்கென்றே உரித்தான சில விசைகள் உள்ளன. அவற்றுள் சில:

ஓரெழுத்துப் பின்னால் செல்ல C-b

ஓரெழுத்து முன்னால் செல்ல C-f

முந்தைய வரிக்குச் செல்ல C-p

அடுத்த வரிக்குச் செல்ல C-n

வரியின் தொடக்கத்திற்குச் செல்ல C-a

வரியின் இறுதிக்குச் செல்ல C-e

இவை முதலில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், பழகிக்கொண்டால் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியும் (விசைப்பலகையில் அம்புக்குறிகள் இருக்கும் ஓரமாகக் கையை நகர்த்த வேண்டியதில்லை).

குறிப்பு: இதுபோன்ற கணினி தொடர்பான தமிழ்க் கட்டுரைகளுக்கு கணியம் மின்னிதழ் (e-magazine) ஒரு நல்ல ஊடகம்.

கச்சத் தீவு … மூழ்காத உண்மைகள்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற இளைய தலைமுறையினரும் இனி வரப்போகின்ற தலைமுறைகளும் போற்றி பாராட்டும் வகையில், என்றும் நினைவு கூறும் விதமாக… முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, வரலாற்றுத் தேவை மிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். கச்சத் தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக வருவாய் துறையையும் செர்த்துக் கொள்ளவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

தீவு என்றாலே நீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கும் நிலப்பகுதிதான். கச்சத் தீவு பற்றிய பல உண்மைகளையும் மூழ்கடித்து வந்தன. இந்நிலையில் கச்சத் தீவு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அலசுவதற்கும் ஆராய்வதற்கும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஒரு வாசலாக இருக்கிறது.

கச்சத் தீவு பற்றி இந்தத் தலைமுறைக்கே தெரியாத உண்மைகள் இதோ…

தாரை ஒப்பந்தம்

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.

கச்சத் தீவின் வரலாறு

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளார்.

1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல் புனித அந்தோணியார் ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்… ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு,       “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனர். அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.

வாலி தீவு

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார். எவ்வளவு பெரிய இந்து மத நம்பிக்கையை நாம் இழந்துள்ளோம்!

காரணங்கள்

இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை மறைத்தும் மறுத்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.

இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி செய்தது என்ன?

அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி அமலாக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்’ என இன்று கூறுகிறார் கருணாநிதி. ‘பல முறை சொன்னால் பொய்யும் உண்மையாகும்’ என்பதை மனதில் கொண்டுதான்   அவர் இதை தொடர்ந்து சொல்கிறார். 1969 – லிருந்து 1971 வரை என்ற முதல் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து… 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாவது ஆட்சிக் காலம் வரை மேற்படி காலகட்டத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் உருப்படியாக ஒன்றுமே அவர் செய்யவில்லை.

‘தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன். என் மீது ஏறி பயணம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டுவதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஒரு உதாரணம் 09.12.2009 அன்று ‘கச்சத் தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார்’ என அறிவித்தார் கருணாநிதி. அதன் பிறகு, 09.12.2009 முதல் 28.02.2011 வரை கச்சத் தீவு பற்றி மூச்சு கூட விடவில்லை அவர். ஆனால், ‘கச்சத் தீவை மீட்போம்’ என 2011 தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். இதுவும் வெறும் காகிதம் தான் என்று மக்கள் புரிந்துவைத்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.

ஜெயலலிதா செய்தது என்ன?

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் மட்டுமல்ல… 1991-ல் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்தபோது, 1994-ல் கச்சத் தீவை நீண்ட கால லீஸ் மூலம் திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். பிறகு 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு தொடர்பாக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று 2004-ல் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
பிறகு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட, ஆகஸ்ட் 2008-ல் இந்திய உச்ச நீதீமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கச்சத் தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும். ஏனெனில், மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை’ என்று வழக்கு தொடுத்தார். இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார் ஜெயலலிதா. மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளை தனது வழக்கில் சாதகமாக எடுத்து வைத்துள்ளார்.
ஏன் மீட்கவேண்டும் கச்சத் தீவை?

13.08.1983-ல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முதல் தாக்குதல் நடைபெற்றது. 10.12.1984-ல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி எனும் அப்பாவி, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து, முதல் கணக்கை ஆரம்பித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3000-த்திற்கும் மேலான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கணக்கு கூடுதலாகத்தான் இருக்க முடியும். மூவாயிரத்துக்கும் மேலான தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

போருக்கு வித்திடும் கச்சத் தீவு

கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகளின் சபையில் இந்தியா சரியாக முயற்சிக்கும் சூழலில், கச்சத் தீவு எப்போதும் இந்தியாவின் அங்கம் எனும் பொதுமக்களின் கனவு நனவாகும். இல்லையென்றால், 1974-ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த P.K.M. தேவர் நாடாளுமன்றத்தில் பேசியது நடந்து விடும்.

“இலங்கை தனது ராணுவத்தை கச்சத் தீவிற்கு திருப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் மோட்டார் படகுகள் கச்சத் தீவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்து. தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்பட ஆளிள்லை. கச்சத் தீவு விவகாரம் எதிர்காலப் போருக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது. நமது நாட்டின் உயிர் பிரச்சினைக்குச் சவாலாக இருக்க போகும் ஒரு விஷயத்திற்கு இது அடித்தளமாக இருக்கப் போகிறது. இந்தியாவின் பிரிவினைக்கு மகாத்மா காந்தியை பலி கொடுத்துள்ளோம். கச்சத்தீவை தமிழகத்தின் அங்கமாக பார்க்காதீர்கள். புனித இந்தியாவின் அங்கமாக கருதுங்கள். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்கள்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசினார் தேவர்.

இன்றும் அந்த நிலைமை தமிழனுக்கு நீடிக்கிறது. சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது!

நன்றி: சவுக்குப் பதிவு http://www.savukku.net/home1/971-2011-06-22-07-52-38.html